Tuesday, February 22, 2011

நாம் பிடித்த புலிவால்- வெளிநாட்டு வாழ்க்கை !

அதிரைநிருபர் குழு | Tuesday, October 26, 2010 | Alaudeen.S , விழிப்புணர்வு ,
அல்லாஹ்வின் திருப்பெயரால்...


பிறக்க ஓர் இடம்!
பிழைக்க ஓர் இடம்!
இதுதான் என் சமுதாய
மக்களின் வாழ்வாகிவிட்டது!
நம் முன்னோர்களுக்கோ
பர்மா, ரங்கூன், மலேசியா!
எங்களுக்கோ வளைகுடா!
இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்
அங்கும் தொடருமா?
எங்கள் வாரிசுகள்?


வளைகுடா வசந்தம் என்றார்கள்!
முன்னால் கால் வைத்த
மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!
வைத்த காலை எடுக்க முடியவில்லை
ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த
எமக்கு இன்றோ நரையும், வழுக்கையும்!
சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது
எம்முடைய பயணமோ
திக்குத்தெரியாமல்
வளைகுடாவை நோக்கியே!


ஊர் சென்றால் நம்
சுமைகளை சுமந்து செல்வதில்
அலாதி ஆனந்தம் நம்
கையெல்லாம் சிவக்க சுமப்போம்
அடுத்த தடவை சுதந்திரபறவைதான்
ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்
காற்றோடு போகும்! மீண்டும் சுமை!

மனைவி மக்களை பார்த்தால்
மன சந்தோஷம் ஆனால்
நம்முடைய கையிருப்பும்
எடுத்த விடுப்பும்
கரைய கரைய மனதில் பீதி!
வெளியிலோ புன்(பொய்)சிரிப்பு!

எத்தனை கொடுத்தாலும்
போதுமென்ற மனம் இல்லை
இதுதான் கொண்டு வந்தாயா?
நம் உள்ளமோ வேதனையில்
கொடுத்த பொருள் நன்றாக
இருந்தது என்று சொல்லி விட்டால்
தங்கப்பரிசு வாங்கிய சந்தோஷம்!
சொல்லத்தான் மனமில்லை!

கண்ணீரோடு குடும்பத்தை
பிரிந்த நாம் சொல்வது
இரண்டு வருடம்தான்!
முடித்து விட்டு போய்விடுவோம்
பல பிரச்சனைகளில்
மறந்தே விடுவோம்!
இதுதான் தொடர்கதையான
வளைகுடா வாழ்க்கை!


சகோதரிகள் திருமணம் முடித்து
வீட்டையும் கட்டி விட்டு
தொழிலுக்கு பணத்தோடு
ஊரில் தங்கிவிட வேண்டும்!
எல்லாம் முடிந்து
நாமும் குடும்பத்தலைவன்
ஆன பிறகு மீண்டும்
அதே பழைய இடம்
வீடு பிள்ளைகள் திருமணம்
ஊரில் நிரந்தரம் என்பதும்
கனவாய் போனதே!



வழி அனுப்ப வாகனத்தில்
வந்த பிள்ளைகள் முகத்தில் மகிழ்ச்சி!
விமான நிலையத்தில் நாம்
உள் நுழைவதை பார்த்தவுடன்
அவர்கள் முகத்திலோ ஒரு சோகம்!
இங்கு வந்தவுடன் தொலைபேசி அழைப்பு
ஏன் வாப்பா உள்ளே சென்ற தாங்கள்
திரும்பி வரவில்லை என்ற தேம்பல் அழுகை
என்ன சொல்லி சமாளிக்க!
நம் நெஞ்சோ சோகத்தால் கனக்க!
குடும்பத்தோடு சேர்ந்து வாழ வழி
இல்லையா என்று உள்ளம் கலங்க
என்ன செய்வோம் எத்தனை காலம்
இந்த அடிமை வாழ்க்கை!
நாம் பிடித்தது புலி வால் அல்லவா?

ஊருக்கு சென்று தொழில் வைக்கலாம்
எல்லோரும் சொல்லும் வார்த்தை!
சென்றவர்கள் சில காலம் கழித்து
மீண்டும் வளைகுடா வாழ்க்கையில்!
ஊரில் நிரந்தரமாகி விட வேண்டும்
என்ற உறுதி இவர்களைப் பார்த்தால்
குலைந்துவிட என்ன செய்ய
மீண்டும் மனப்போராட்டம்!

ஊரில் சிறு தொழில் வைக்காதே
பெரிதாக தொழில் தொடங்கு
ஆலோசனை இலவசம்!
பணத்தை எந்த மரத்தில் பறிக்க
காலம் இப்படியேதான் போகுமா?
குடும்பத்தோடு சேர்ந்து
வாழ்வது எப்பொழுது?


கல்வி இல்லாமல் வந்தவர்கள்
கஷ்டப்படும் நிலையை பார்த்து
கல்வியை கற்றுக்கொண்டு வா!
என்றார்கள், கல்வி கற்று வந்ததும்
நல்ல வேலை மனைவி மக்களுடன்
வாழ்க்கை சிலருக்கு!
கல்வி கற்ற பலர் தனிமரமாக!


ஊரில் கணக்கில்லா சொத்து
உள்ளவனை பார்த்து
ஏன் இங்கு வந்தாய் என்றால்
இங்கு உள்ள சுகாதாரம்
ஊரில் வருமா அதனால்தான் என்றான்?
இங்கு வந்து வாழும்
குடும்ப பெண்களிடம்
கேட்டால் ஊர் போல் வருமா
வளைகுடா என்றார்கள்!



நாம் இழந்தது என்ன?
தாய் தந்தை சேவையை!
குடும்பத்தின் சுக துக்கத்தை!
நம் உறவுகளின் அனுசரணையை!
தென்றல் வீசும் காற்றை!
மழலையின் வார்த்தையை!
மழையின் மண்வாசனையை!

பள்ளி விட்டு வந்ததும்
பள்ளியின் கதை சொல்ல
தந்தையை தேடும்
பிள்ளை செல்வங்களை!
தந்தையுடன் செல்லும்
பிள்ளைகளை பார்த்து
நம் தந்தை அருகில்
இல்லையே என்று வாடும்
நம் பிஞ்சுகள் இழக்கும் சந்தோஷத்தை!

வாகனத்தில் செல்லும்பொழுது
சாலைகளில் இருபுறமும்
பசுமை மரங்களோடு
சேர்ந்து வரும் தென்றலை!
இன்னும் நிறைய!
பணம் உண்டு இங்கு
நம் மனம் மட்டும் ஊரில்!
இயந்திரத்தனமாக தொடர்கிறது
புலிவாலை பிடித்த வாழ்க்கை!

Monday, February 21, 2011

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் !

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி

இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்

நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்

குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.

4. உறுதியாக இருத்தல்

பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.

அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.

உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.

தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்

குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.

அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்

தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.

8. மன்னித்து விடுங்கள்

குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.

9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்

நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.

10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்

சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.

இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.

அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.

இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்

உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.

இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

12. கீழ்ப்படிதல்

பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!

தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!

முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.

இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.

மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

நன்றி : தமிழ் இஸ்லாம்

இல்லறம் - பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க!

இல்லறம் - பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க!

திருமணம் என்பது மனிதர்கள் இழைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும். இஸ்லாம் இந்தத் திருமணத்தின் மூலமாக மட்டுமே எதிர்எதிர் பாலியல் கொண்டவர்களை இணைக்கின்றது. இஸ்லாம் இந்தத் திருமண பந்தத்தினை மிக அதிகமாகவே வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது.

"நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன."(அல்குர்ஆன் 30:21)

இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கம் என்பது பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அது தனிமனிதர்களை தவறான கெட்ட நடத்தைகளிலிருந்தும், விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. இயற்கையிலேயே மனிதன் ஆசாபாசங்களில் தன்னை இழந்து விடக் கூடியவனாக இருக்கின்றான். இன்னும் ஷைத்தான் அவனது ஆசாபாசங்களைத் தூண்டி விட்டு, மனித இனம் வெட்கித்தலைகுனியக் கூடிய விபச்சாரத்தின் பக்கம் அழைத்துச் சென்று விடக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

பெண் ஷைத்தானைப் போலவே (மனதை மயக்கும் விதத்தில்) அணுகுகின்றாள், இன்னும் ஷைத்தானால் பீடிக்கப்பட்ட (மனதை மயக்கும் விதத்தில்) நிலையிலேயே வெளியேறுகின்றாள். உங்களில் ஒருவர் மனதை மயக்கும் விதத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பீர்கள் என்றால், அவன் அவளது மனைவியிடம் செல்லட்டும், ஏனென்றால், மற்ற பெண்களிடம் உள்ளது போலவே உங்கள் மனைவியிடம் உள்ளது. அவன் தனது இச்சையை ஆகுமான வழியில் தீர்த்து திருப்தி கொள்ளட்டும். (முஸ்லிம்)

இரண்டாவதாக, திருமணத்தின் மூலம் வாரிசுகள் உருவாகி, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயம் வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. முறையான திருமண உறவு முறையின் மூலம் பெற்றெடுக்கின்ற மழலைச் செல்வங்களின் மூலம், இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்தையும் நாம் நிறைவேற்றியவர்களாகின்றோம்.

அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் (மறுமை நாளில்) மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் என்னுடைய சமுதாயத்தவர்கள் அதிகமாக இருப்பதைக் காண நான் விரும்புகின்றேன்." (பைஹகி).

இவை தான் இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கமெனினும், இன்னும் பல சிறப்பு அம்சங்கள் அதனுள் பொதிந்து கிடக்கின்றன.

அதாவது ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவது, ஒருவர் மற்றவர் மீது கருணையோடும், இரக்கத்தோடும் நடந்து கொள்வது, இன்னும் ஒருவர் மற்றவரின் கெடுதல்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வது, அது மட்டுமல்ல இருவரும் இல்லறத்தை நல்லறமாக மாற்றுவதன் மூலம் நன்மையான பல காரியங்களை இணைந்து செய்வதற்கான சூழல் அங்கு நிலவ ஆரம்பிக்கின்றது, இருவருது அன்புப் பிணைப்பின் மூலமாக இஸ்லாமிய சமுதாயம் ஒரு பாதுகாக்கப்பட்ட சமுதாயமாக, பாதுகாப்புணர்வு கொண்ட சமுதாயமாக பரிணமிப்பதோடு, அங்கு பழக்க வழக்கங்களில் நன்னடத்தையும், சமூகம் மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றது.

துரதிருஷ்டவசமாக, மற்ற சமுதாயங்களைப் போலவே இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்திலும் மணவிலக்குகள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

இன்றைக்கு நீங்கள் வாழக் கூடிய சூழலில் இவ்வாறான மணவிலக்குகள் அதிகமில்லாதிருந்தாலும் கூட, மேலே நாம் சொன்ன திருமணத்தின் காரணமாக விளையக் கூடிய நன்மைகள் தானாக விளைந்து விடுவதில்லை. மாறாக, அன்பு, பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், முயற்சிகள், இன்னும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ளுதல், இவை அனைத்தையும் விட அற்பணிப்பு மனப்பான்மையுடன் ஒருவர் மற்றவரிடம் நடந்து கொள்ளுதல் போன்றவற்றின் மூலமாகத் தான் அத்தகைய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, தானாக எந்த நன்மையும் விளைந்து விடுவதில்லை. அனைத்திற்கும் நமது முயற்சி இன்றியமையாததொன்றாக இருக்கின்றது.

இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுவது போல, "உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்;" (அல்குர்ஆன் 30:21)

கணவன் மனைவிக்கிடையே காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டும் விடைபெற்று விடுமென்று சொன்னால், அதனை மீட்டிக் கொண்டு வருவதற்கு அங்கு கருணையும், சகிப்புத் தன்மையும், ஒருவர் மற்றவருக்கிடையே தொடர்புகள் நீடித்திருக்கச் செய்வதும் அவசியமானதாகும், இவை மூலம் விடைபெற்றுச் சென்ற காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டுக்களும் அங்கு தலைத்தோங்க ஏதுவாகும். ஊடலுக்குப் பின் கூடல் என்பதுதான் உறவை இருகச் செய்யும் சாதனமாகும்.

தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக வாழ்வது என்பது அவர்களுக்கு மட்டும் நன்மை பயப்பதல்ல, மாறாக, அது உங்களது குழந்தைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் அம்சமாக இருக்கின்றது. நீங்கள் உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பு பாராட்டி, சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பொழுது, அந்தச் சூழலில் வாழக் கூடிய உங்களது குழந்தைகளும் இத்தகைய நற்பழக்கங்களைக் கற்றுக் கொண்டு, தங்களது வாலிப நாட்களில் அதனைக் கடைபிடிப்பதற்கான முன்மாதிரிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது ஆய்வுகள் கூறும் முடிவுகளாகும். இன்னும் அமைதியான சூழ்நிலைகள் நிலவக் கூடிய இல்லறத்தில், வாழ்வின் வசந்தங்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கும். இது ஒன்றும் கடிமான விஷமுமல்ல, இதற்கென நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமுமில்லை, உங்களது பழக்கவழக்கங்களில் சற்று மாறுதல்களைக் காண்பித்தாலே போதும், இல்லறத்தில் நல்லறங்கள் பூக்க ஆரம்பித்து விடும். அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம் :

ஒருவர் மற்றவர் உரிமைகளை மதித்து நடப்பது

உங்களது திருமணம் வெற்றிகரமான திருமணமாக பரிணமிக்க வேண்டுமென்றால், திருமணமான ஆண்-பெண் இருவரும், ஒருவர் மற்றவர் மீது என்னனென்ன உரிமைகள் இருக்கின்றன என்பதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதுடன், அவற்றை மதித்து நிறைவேற்ற கூடுதல் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கணவனின் மீது உள்ள உரிமைகள் என்னவென்றால், தன்னை நம்பி உள்ள குடும்பத்தினருக்கு தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் போன்றவர்களுக்கான வாழ்வியல் தேவைகளை அதாவது, உடை, உணவு, உறையுள், கல்வி இன்னும் பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அதற்கான பொருளாதாரத்தைத் திரட்டிக் கொடுப்பது.

இன்னும் குடும்பத் தலைவன் என்ற முறையில் குடும்பப் பராமரிப்பு அத்துடன் மார்க்க வழிகாட்டுதல்கள் மற்றும் குடும்பத்தினரிடையே ஒழுக்க மாண்புகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை கணவன் மீதுள்ள இன்றியமையாத கடமைகளாகும். இவை யாவும் அவன் மீதுள்ள தவிர்க்க முடியாத கடமைகளாகும்.

மனைவியைப் பொறுத்தவரையில், இறைவன் அனுமதித்துள்ள வரம்புகளைப் பேணுவதும், அதற்காக கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், குடும்பப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்துவதும் அவளது இன்றியமையாத கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது. இன்னும் பல பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடியவளாக அவள் இருந்தாலும், மேலே சொன்னவைகள் தான் அவளுக்குரிய அடிப்படைக் கடமைகள் என்பதை அவள் மறந்து விடக் கூடாது. இவற்றை அவள் நிறைவேற்றத் தவறுவாளாகில், அந்தக் கணத்திலிருந்து குடும்பத்தில் குழப்பங்கள் தலைதூக்க ஆரம்பித்து விடும், குடும்பச் சூழ்நிலை பாழ்பட ஆரம்பித்து விடும். குடும்பத்தில் அமைதி நீங்கி, புயல் வீச ஆரம்பித்து விடும். இத்தகைய சூழ்நிலைகளினால் அங்கு அன்பு அழிந்து, கருணையை இழந்து, ஒருவர் மற்றவரைப் பிணைக்கக் கூடிய நற்பண்புகளையும் இல்லாமலாக்கி விடும்.

எனவே தான், கணவன் மனைவி இருவரும் தங்களுக்குரிய கடமைகள் என்னவென்பதை ஆராய்ந்து, அதனை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவர் மீது காட்டக் கூடிய அலாதியான அந்த அன்பு, அவர்களது இதயத்தைப் பிணைப்பதோடு, இறைவன் நாடினால் மேலும் மேலும் வசந்தம் வீசக் கூடிய தளமாக இல்லறம் மாறவும் வாய்ப்பு ஏற்படும்.

தனிமைச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குதல்

இன்றைய உலகம் என்பது அவசர உலகம். அதனால் வாழ்க்கையை வாழ்வதற்குக் கூட நேரமில்லாமல் வாழக் கூடிய நிலைமையில் தான் இன்று நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே இருக்கின்ற 24 மணி நேரம் போதவில்லை என்று அங்கலாய்ப்பவர்களைத் தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் அந்த 24 மணி அலுவல்களுக்கிடையிலும் உங்கள் மனைவிக்காகவும் சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். அதில் அவளுடன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகவும் அவசியமில்லாத முக்கியத்துவமில்லாத எத்தனையோ விஷயங்களுக்காக நாம் நம் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால் திருமணம் எனும் பந்தத்தில் நம்முடன் இணைந்த அவளுடன், வாழ்நாள் முழுவதும் நம்மையே நம்பி வாழ்ந்து வரக் கூடிய அவளுக்கென சில மணித்துளிகளை செவழிப்பதற்குத் தயங்குகின்றோம்.

சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் தனிமையில் சந்திப்பதே ஒரு சில நிமிடத்துளிகள் தான். எனக்கு நேரமில்லை, நேரமில்லை, காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, அடுத்து வேலைக்குச் செல்வது, மாலையில் வீட்டுக்கு வருவது, உடன் அடுத்தடுத்த பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவது இப்படியாக காலத்தை நகர்த்தக் கூடிய நாம், மனைவிகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் எந்தளவு நேரத்தை ஒதுக்கினோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது.

இன்றைக்கு பணம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாக மாறி விட்டது. பணம் தான் எல்லாம் என்ற மனநிலை மக்கள் மனதில் நோயாக மாறிக் கொண்டிருக்கின்றது. மனிதர்களது உணர்வுகளை பணத்தைக் கொண்டு திருப்திபடுத்தி விட முடியாது என்பதைப் புரியாதவர்களாக மனிதர்கள் மாறி விட்டிருக்கின்றார்கள். இதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு உங்களது நேரங்களைத் திட்டமிட்ட அமைத்துக் கொள்ளுங்கள். நேர முகாமைத்துவம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவசியம். அவசர கால ஓட்டத்தில் உங்கள் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில நேரத்துளிகளை ஒதுக்கித் தரும் பொழுது, பணம் தராத சுகத்தை உங்களது அருகாமை அவர்களுக்கு வழங்கும்.

அதிகாலை பஜ்ர் தொழுகைக்குப் பின் குடும்பத்தினர் அனைவருடனும் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பது, அல்லது இரவு சாப்பாட்டிற்குப் பின் சிறிது நேரம் குடும்பத்தினருடன் உட்கார்ந்திருப்பது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் எந்தளவு பரபரப்பானவராக இருந்தாலும் சரி, குடும்பத்தினருக்காகவென ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களது உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் உங்களைப் பற்றி அவர்களும், அவர்களைப் பற்றி நீங்களும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றீர்கள் என்பதையும் உணர்த்த முடியும். உணர்வுகள் தான் மனிதனை உச்சத்திற்கும் கொண்டு செல்லும், அதே உணர்வுகள் தான் மனிதனை தாழ்நிலைக்கும் கொண்டு செல்லும்.

கவனிப்பு அல்லது அக்கறை

உங்களது திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்படியானால், ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டவர் என்பதை, ஒருவர் மற்றவருக்கு உணர்த்தத் தவறக் கூடாது.

உங்களது மனைவி சற்று தாகமெடுக்கின்றது என்று சொன்னால், உடனே சென்று ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டு வந்து அவளுக்கு வழங்குங்கள். இல்லை, உங்களது கணவன் களைப்பாக இருக்கின்றது என்று சொன்னால், அவனது களைப்பு எதனால் ஏற்பட்டது என்று அறிந்து கொண்டு அதற்கான ஆறுதலைக் கூறுங்கள். எனவே, ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறும்
தளமாக மாறிக் கொள்ளலாம். இன்னும் ஒருவர் மற்றவரது சுமைகளைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும். குடும்ப அலுவல்களில் மனைவிக்கு உதவுவது கணவனின் உதவி என்றால், கணவனின் அலுவல்களுக்கு இடையூறாக இல்லாமல், அவனது சிரமங்களைப் புரிந்து கொண்டு, அந்த சிரமங்களைச் சமாளிப்பதற்குண்டான ஊக்கத்தை வழங்குவது மனைவி புரியக் கூடிய உதவியாக இருக்கும்.

ஒருவர் மற்றவரது அலுவல்களின் சுமைகளை இறக்கி வைப்பதன் மூலம், வேலைப் பளு குறைவதோடு, இணக்கமான சூழ்நிலையும் நிலவ ஆரம்பித்து விடும். இதுவே உங்களது பிணைப்பை உறவை வலுப்படுத்தும்.

அமைதியாகப் பேசுவது, கவனமாகச் செவிமடுப்பது

தம்பதிகளுக்கிடையே பிரச்னை உருவாகுவது என்பது இருவருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாததே காரணமாகும். அதாவது உங்கள் இருவருக்கிடையே பேச்சுவார்த்தையே கிடையாது என்பதல்ல, மாறாக, அர்த்தமுள்ள பேச்சுக்கள் குறைவாக இருப்பது தான் பிரச்னைக்கே காரணமாகும்.

நீங்கள் உங்களுக்கிடையே உரையாடும் பொழுது, நீங்கள் இருவரும் தம்பதிகளாக இருக்கின்றீர்கள், அவள் மனைவி, இவன் கணவன் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் பேசும் பொழுது சப்தமிட்டு, உரத்த குரலில் பேசுகின்றீர்களா? அல்லது மிக மெதுவாகப் பேசுகின்றீர்களா? ஒருவர் பேசும் பொழுது மற்றவர், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானித்து கவனிக்கின்றீர்களா? அல்லது அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது? என்ற அலட்சியப் போக்கில் இருக்கின்றீர்களா?

ஒருவர் மற்றவரிடம் பேச்சுக் கொடுக்க வரும் பொழுது, அவள் என் மனைவி, இவன் எனது கணவன், அவன் அல்லது அவள் என்னிடம் அர்த்தமுள்ள பேச்சைத் தான் பேச வருகின்றான் அல்லது வருகின்றாள் என்ற உணர்வுடன், ஒருவர் மற்றவரது பேச்சை அக்கறையுடன் செவிமடுக்க வேண்டும்.

அவள் அல்லது அவன் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானத்துடன் கவனித்து, அதனை முழுவதுமாக கிரகித்து, அதற்கான பதிலை அல்லது ஆலோசனைகளை வழங்க வேண்டும். அந்த ஆலோசனைகள் கூட அறிவுறுத்தலாக இருக்க வேண்டுமே ஒழிய, கட்டளைத் தொணியில் இருக்கக் கூடாது. இதன் மூலம் வற்புறுத்தல் இல்லாத நிலை உருவாகுவதோடு, இருவருக்குமிடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும். புரிந்துணர்வே பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.

இறைவனிடம் உதவி கேளுங்கள்

திருமணத்தின் மூலம் உங்கள் இருவரையும் கணவன் மனைவி என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியன், அல்லாஹ் தான், அவனே உங்கள் இருவருக்குமிடையே அன்பையும், பாசப் பிணைப்பையும் உருவாக்கி வைத்தான்.

இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அன்பு என்பது இறைவன் புறத்திலிருந்து உருவானது, வெறுப்பு என்பது ஷைத்தானிடமிருந்து வந்தது, அவன் தான் உங்களுக்கு அல்லாஹ் எதனை ஆகுமாக்கி வைத்திருக்கின்றானோ அதன் மீது வெறுப்பைத் திணிக்கின்றான்...எனவே, உங்கள் மனைவி மீதுள்ள அன்பு குறைகின்றதென்றால், நீங்கள் அல்லாஹ்வின் புறம் திரும்புங்கள், அவனே
அனைத்து நல்லறங்களையும் வழங்கக் கூடியவன், அவனிடமே உதவி கேளுங்கள், உங்கள் மனைவி மீது அன்பாக இருப்பதற்காகவும்..! இன்னும் அவளிடம் காணக் கூடிய கெட்ட நடத்தைகளின் பொழுது பாராமுகமாக இருப்பதற்காகவும்..! உங்கள் இதயங்களை இணைப்பதற்காகவும், இன்னும் நீங்கள் எதனை விரும்புகின்றீர்களோ அத்தனையையும் கேளுங்கள், அவனே உங்களது தேவைகளை நிறைவேற்றக் கூடியவனாகவும், உங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான், அவற்றுக்குப் பதிலளிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

திருமணம் என்பது இஸ்லாமிய சமுதாய வாழ்வில் தவிர்க்க முடியாத, இன்றியமையாத சாதனமாகும். ஒவ்வொரு நாள் சுமையிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் நீங்கள் ஓய்வெடுக்கக் கூடிய தளமாக திருமணம் எனும் பந்தம் இருக்க வேண்டும். அது குளிருக்குக் கதகதப்பானதாகவும், வெயிலுக்கு இதமான குளிர்ந்த தென்றலாகவும் திகழ வேண்டும். அதன் மூலம் அன்பும், பாசமும் தளைத்தோங்க வேண்டும். ஒருவரை ஒருவர் சரியான அளவில் புரிந்துணர்வு கொண்டு செயல்பட வேண்டும். அதன் மூலம் பாசப்பிணைப்பில் மேலும் இறுக்கம் ஏற்பட வேண்டும்.

உங்கள் குடும்பங்கள் புயல் வீசுகின்ற தளமாக இருக்குமென்றால், மேலே சொன்ன அறிவுரைகளைச் செயல்படுத்திப் பாருங்கள், உங்களுக்கிடையில் இருக்கின்ற தவறுகளைக் களைந்து, கருணை எனும் இறக்கையைத் தாழ்த்திப் பாருங்கள். வசந்தம் எனும் வானம்பாடி பாடித்திரியும் நந்தவனமாக, பாச மலர்க் கூட்டமாக உங்கள் இல்லம் திகழக் கூடும். இறைவன் நாடினால்..!

எல்லாவற்றுக்கும் மேலாக அவனிடமே கையேந்துங்கள். அவனே, இதயங்களைப் புரட்டக் கூடியவனாக இருக்கின்றான்

Source : www.nidur.info
http://www.ottrumai.net

சவுதி அரேபியாவின் பொது மன்னிப்பு அறிவிப்பு !

இந்திய துணை தூதரக அலுவலகம் - ஜெட்டாஹ்

அறிவிப்பு

· சவுதி அரேபியாவின் பொது மன்னிப்பு அறிவிப்பு கீழ்கண்டவைகளுக்கு மட்டும்தான் பொருந்தும் என அறிவிக்கப்படுகின்றது :
உம்ரா / ஹஜ் / விசிட்விசா போன்றவற்றில் அதிக நாட்கள் தங்கிஇருப்பவர்கள்.

· இந்த பொது மன்னிப்பு, வேலை சம்பந்தப்பட்ட விசாவில் வந்தவர்களுக்கு இல்லை. அதுபோல் HURBOOB - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கலுக்குமல்ல - அதன் பிரச்சனையில் உள்ளவர் வர்களுக்கும் அல்ல.

· இந்த பொது மன்னிப்பு 23 மார்ச் 2011 ல் முடிவடைகின்றது . உம்ரா / ஹஜ் / விசிட் விசா போன்றவற்றில் அதிக நாட்கள் தங்கிஇருப்பவர்கள் உடனடியாக இந்த சந்தர்பத்தை மார்ச் 23 க்கு முன்பாகவே பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுருத்தப்படுகின்றர்கள்.

· யாரெல்லாம் இந்த குறுப்பிட்ட காலத்திற்குள் நாடு செல்ல வில்லையோ, அவர்கள் அபராத தொகை கட்ட நேரிடும், மேலும் அவர்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்க நேரிடும்.

· யாரிடத்தில் ஒரிஜினல் பாஸ்போர்ட் அட்டை இல்லையோ, அவர்கள் அவுட்பாஸ் ( out pass ) பேப்பரும், ஜவாஜாத் அலுவலகத்திலிருந்து உம்ராஹ் / ஹஜ் விசாவிர்காண அத்தாச்சி பேப்பரையும் கொண்டு வரவேண்டும்.


அவசர சான்றிதல் - அவுட்பாஸ் பெறுவது எப்படி :
· சம்பந்தப்பட்ட நபர்கள், அவர்களின் பாஸ்போர்ட் காப்பியும், அத்துடன் ரேஷன்கார்டு அல்லது கார் வாகனவோட்டு சான்றிதல், அல்லது எலக்ரிகல் கார்டு அல்லது ஏதாவது இந்தியன் அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கத்தின் போட்டோ அடையாள அட்டை ஆகிய ஏதாவது ஓன்றை வைத்து அவுட்பாஸ் விண்ணப்பிக்கவேண்டும்.

· இந்த அவுட்பாஸ் 3 மாதத்திற்கு செல்லுபடியாகும்.

HUROOB CASES - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கள்
· ஹுரூப் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களின் கபீலிடத்திலிருந்து NOC certificate - பிரச்சனை இல்லை என்ற சான்றிதல் வைத்திருக்கவேண்டும்.
· ஜவாஜாத் - jawazat போலீஸ் பாது காவலில் வைக்கப்பட்டு, தர்ஹீல் என்ற போலீஸ் நிலையதிலிருந்து அனுப்பப்படுவார்கள்.
· இந்த பொது மன்னிப்பு, HURBOOB CASES - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கள் - அதன் பிரச்சனையில் உள்ளவர் வர்களுக்கும் அல்ல.
· தாயகத்திற்கு திரும்ப அவசர சான்றிதல் -அவுட்பாஸ் மட்டும் போதுமானதல்ல.
· ஹுரூப் சம்பந்தப்பட்டவர்கள், இந்நாட்டு சட்டப்படி, அவர்களின் கபீலிடம் சென்று அவர்கள் பிரச்னைகளை முடித்து கொள்ள வேண்டும் .

ஆற்றின் குறுக்கே பிரமாண்ட, ரன்வே!

அழகான, மிக நீண்ட கடற்கரை, மிகப்பெரிய துறைமுகம், கிளாவர் வடிவ கத்திப்பாரா மேம்பாலம், பாரம்பரிய கட்டடங்கள் என, பல்வேறு பெருமைமிகு அடையாளங்களை கொண்டுள்ள சென்னைக்கு, மிக விரைவில் மற்றொரு பெருமையும் சேரப் போகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள், நாட்டிலேயே முதலாவதாக, ஆற்றின் குறுக்கே ரன்வே கொண்ட ஒரு விமான நிலையம் என்ற சிறப்பை,சென்னை விமான நிலையம் பெற உள்ளது. மும்பையில் மித்தி நதியின் மீது ஒரு ஓடு பாதை கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த ரன்வே விமானங்கள் நிறுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே, நாட்டிலேயே முதல் முறையாக, ஆற்றின் குறுக்கே ஓடு பாதை கட்டப்படுவது சென்னை விமான நிலையத்தில் தான்.
பல்வேறு வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள், சென்னை நகரைச் சுற்றி தொழிற் சாலைகள் துவங்கியுள்ளதாலும், சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித் துள்ளதன் காரணமாக வும், கடந்த சில ஆண்டுகளாக சென்னை நகரின் விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது. பல்வேறு தனியார் விமான நிறுவனங்கள் உள்நாட்டு சேவையை துவக்கியுள்ளன. விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்றாற்போல் கூடுதல் ரன்வே தேவைப்படுகிறது. முதற்கட்டமாக, சென்னை விமான நிலையத்தில் உள்ள செகண்டரி ரன்வேயின் நீளத்தை அதிகரிக்கவும், அடுத்ததாக, "பேரலல் ரன்வே' எனப்படும் இணை ஓடுதளம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. செகண்டரி ரன்வேயின் நீளத்தை அதிகரிப்பதற்காக விமான நிலையத்தின் அருகில் உள்ள அடையாறு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படுகிறது.
வளர்ந்த நாடுகளால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்ற இந்த பிரமாண்ட திட்டத்தை, உள்நாட்டு பொறியாளர்கள் திறம்பட செயல்பட்டு, அடையாறு ஆற்றின் மீது ரன்வேயை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் புதிய ரன்வே மொத்தம், 1400 மீட்டர் நீளம் கொண்டது. இதில், அடையாறு ஆற்றுப்பகுதியில் மட்டும், 200 மீட்டர் நீளத்திற்கு ரன்வே அமைக்கப்படுகிறது. 430 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதில், பாலப் பணிகளுக்காக 200 கோடி ரூபாயும், மற்ற பணிகளுக்காக, 230 கோடி ரூபாயும் செலவிடப்படுகிறது.
அடையாறு ஆற்றின் மேல் கட்டப்படும் மேம்பாலத்தில், ஒரு வரிசைக்கு 53 தூண்கள் என ஒன்பது வரிசையில், 477 தூண்கள் மீது, 2,440 காங்கிரீட் கர்டர்களை பொருத்தி, அதன் மேல், <200 மீட்டர் நீளமும், 462 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பால ரன்வே கட்டப்படுகிறது. "ஆற்றின் குறுக்கே ரன்வே அமைப்பதால், எந்த ஆபத்தும் ஏற்படாது. கடந்த 10 ஆண்டுகளில், 2005ல் மட்டுமே அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அப்போதைய நீர் மட்டத்தை கருத்தில் கொண்டே தற்போது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, நீர் போக்குவரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், ரன்வே மேம்பாலம் உயர்த்தி கட்டப்படுகிறது...' என்று, விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த பாலத்தை அதிக வேகத்துடன் தண்ணீர் மோதினாலும் தாங்கக்கூடிய தூண்கள், இரும்பு எக்கு கொண்டு தயாரிக்கப்பட்ட உத்திரங்கள், ஆற்றில் வெள்ளம் வந்தாலும் பாதிக்காத வகையில் இருபுறமும் கான்கிரீட் அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், இந்த ரன்வேயை, உலகின் மிகப் பெரிய விமானமான, "ஏ 380' விமானங்களும் பயன்படுத்தலாம். இரண்டாவது ரன்வே திட்டத்தில், பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரமாண்ட திட்டம் நிறைவேறும் நேரத்தில், நாட்டிலேயே, ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரன்வே கொண்ட முதல் விமான நிலையம் என்ற பெருமையை, சென்னை விமான நிலையம் பெறும்.*** தினமலர்

Thursday, February 17, 2011

(LIVER) கல்லீரல் பேசுகிறது !

நீங்கள் உங்கள் கல்லீரலை (LIVER) எவ்வளவு நேசிக்கிறீர்கள்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு நாம் அளிக்கும் பதில் என்னவாக இருக்கும்?

கல்லீரலை நேசிக்க வேண்டுமா? எதற்காக? முழுமையாக அறியாத ஒன்றை எவ்வாறு நேசிக்க இயலும்? என்பது போன்ற பதிலே பெரும்பாலும் பெறப்படும்.

ஒரு நபர் ஒன்றை நேசிக்க வேண்டும் எனில் அதனால் ஏதாவது உபயோகம் அவருக்கு இருக்க வேண்டும் அல்லது அதனால் இவர் நேசிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலே மனப்பூர்வமான நேசம் அதன் மீது அவருக்கு வைக்க இயலும். அந்த வகையில் நோக்கினால் ஒரு மனிதனைப் பொறுத்தவரை அவன் அவனது கல்லீரலை வாழ்நாள் முழுவதும் மிகுந்த அக்கறையுடன் நேசிக்க வேண்டும்.

எதற்காகக் கல்லீரலை நேசிக்க வேண்டும்?. இதற்கான பதிலைக் கல்லீரலே நம்மிடம் பட்டியல் இட்டால்...? இதோ கல்லீரல் பேசுகிறது:

ஹலோ, நான் தான் உங்கள் கல்லீரல்.... நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை ஒன்பது விதத்தில் விவரிக்கப்போகிறேன். கவனமாகக் கேளுங்கள். அதன் பின் நீங்களும் என்னை நேசிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யுங்கள்.

1) நான் உங்களுக்குத் தேவையான இரும்பு சத்துக்களையும் இதர வைட்டமின்களையும் சேமித்து வைக்கிறேன்.

நானின்றி நீங்கள் தொடர்ந்து செயல்படக்கூடிய சக்தியை பெற மாட்டீர்கள்.

1) நான் உங்களுக்குத் தேவையான இரும்பு சத்துக்களையும் இதர வைட்டமின்களையும் சேமித்து வைக்கிறேன்.

மனிதன் ஆரோக்கியமாக வாழத்தேவையான சக்திகள் இரும்பு சத்துக்களிலும் வைட்டமின்களிலும் நிறைந்துக் காணப்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?. எனவே நானின்றி நீங்கள் தொடர்ந்து செயல்படக்கூடிய சக்தியைப் பெற மாட்டீர்கள்.

2) நீங்கள் உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கச் செய்யும் பைல் (BILE) எனும் திரவத்தை நானே உற்பத்தி செய்கிறேன்.

இது இல்லையேல் நீங்கள் உட்கொள்ளும் உணவு ஜீரணிக்காமல் (அதிலிருந்து சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல்) வீணாகிவிடும். இப்பொழுது நான் இல்லையெனில் உங்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள். உணவு சாப்பிட இயலாமல், வாழ்நாள் முழுவதும் குளுக்கோஸை உடலினுள் செலுத்திக் கொண்டு வாழ்வதை எந்த மனிதனாவது விரும்புவானா?

3) நீங்கள் உட்கொள்ளும் உணவிலுள்ள விஷத்தன்மை கொண்ட ஆல்கஹால் போன்ற இதர தீமையான இரசாயன திரவங்களின் அமிலங்களை நானே சுத்தப்படுத்துகின்றேன்.

இது போன்ற ஆபத்தான விஷ அமிலங்கள் சில நேரம் மது போன்ற போதைப் பொருட்கள் மூலமும் அல்லது சாதாரண மருந்துகள் அதிக அளவில் உபயோகிப்பதன் மூலமும் உடலில் தேங்குகின்றன.

நான் இவற்றை முறையாக அகற்றவில்லையெனில் இத்தகைய விஷயங்களால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

4) நான் உங்கள் உடல் இயங்க தேவையான சக்திகளை(சர்க்கரை - Sugar குளுகோஸ், கார்போஹைட்ரேட் - Carbohydrates, கொழுப்பு சத்து - Fat போன்றவைகளை..) ஒரு பாட்டரி போல் உங்கள் தேவைக்கேற்ப சேமித்து வைக்கிறேன்.

நான் இவ்வாறு செய்யாவிடில் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்து அளவில் குறைந்து அதனால் நினைவிழந்து கோமா (COMA) வரை கூட செல்ல நேரிடும் என்பதை நீங்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.

நான் என் பணியை முறையாகச் செய்திருக்காவிட்டால் ஒருவேளை இன்று நீங்கள் உங்கள் படுக்கையிலிருந்தே எழுந்திருக்க இயலாது.

5) நீங்கள் பிறக்கும் முன்பே உங்கள் முறையான இயக்கத்திற்குத் தேவையான இரத்தத்தை நானே உருவாக்குகிறேன்.

நானில்லையேல் நீங்கள் இவ்வுலகில் உயிருடன் இருந்திருக்கவே மாட்டீர்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

6) உங்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புதிய புரோட்டீன்களை (Proteins-புரதச் சத்துகள்) நானே தயாரிக்கின்றேன்.

நானின்றி உங்கள் உடல் வளர்ச்சி பெற்றிருக்க முடியாது.

7) நான் நீங்கள் சுவாசிக்கும் காற்றிலிருந்து வெளியேற்றப்படும் புகைகள் போன்ற நச்சுப்பொருட்களையும் அகற்றுகின்றேன்.

நானில்லையேல், இது போன்ற கலப்பான தூய்மையற்ற காற்றின் விஷத் தன்மையினாலேயே உங்களுக்கு கேடு ஏற்பட்டிருக்கும்.

8) நான் இரத்தத்தை உறையச் செய்யும் சக்திகளை (CLOTTING FACTORS) உருவாக்குகின்றேன். இதன் மூலமே உங்களுக்கு ஏதும் காயம் ஏற்படும் போது அந்த இடத்தில் இரத்தம் உறைந்து ஒரு தடுப்பை அது ஏற்படுத்தி தொடர்ந்து இரத்தம் வெளியேறாமல் நின்று விடுகிறது.

உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டு தொடர்ந்து இரத்தம் நிற்காமல் ஓடினால் அதனால் நீங்கள் மரணித்து விடுவீர்கள் என்பதை நான் தனியாகக் கூற வேண்டிய அவசியமில்லை தானே?.
9) நான் உங்களைத் தாக்கும் ஃப்ளூ போன்றக் குளிர்ச்சியான ஜலதோஷம் ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளைத் தாக்கி அழிக்க அல்லது அதனை வலுவிழக்கச் செய்கிறேன்.

இவ்வாறு நான் செய்யாமல் இருந்தால் மனிதர்கள் அறிந்த மற்றும் அறியாத அனைத்து அற்பக் கிருமிகளின் தாக்குதலும் உங்களை நோயாளியாக்கி முடக்கி வைத்து இருக்கும்.

இதுவெல்லாம் நான் உங்கள் மீதுள்ள நேசத்தினால் செய்கின்றேன். ஆனால், நீங்கள் என்னை அதே போல் நேசிக்கின்றீர்களா?.

நான் உங்களை நேசிக்காமல் இருந்து விட்டால் எத்தனை பாரிய ஆபத்திற்கு நீங்கள் உள்ளாவீர்களோ அதே அளவிற்கான ஆபத்தை நீங்கள் என்னை நேசிக்காமல் இருப்பதனாலும் அடைவதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளும் உள்ளன.

என்னை நீங்களும் நேசிக்க வேண்டும் என்றதுடன், வெறுமனே எப்பொழுதாவது என்னை மனதில் நினைத்துக் கொண்டு "நானும் என் கல்லீரலை நேசிக்கிறேன்" என்று கூறினால் என்னை நேசித்து விட்டதாக ஆக முடியாது. உங்களை நேசிக்கும் முகமாக எந்நேரமும் மேலே பட்டியலிட்டது போன்ற முக்கியமான சில வேலைகளை நான் செய்வது போன்று நீங்களும் சில காரியங்களைச் செய்ய வேண்டும். என்றாலே நீங்களும் என்னை நேசிக்கின்றீர்கள் என்பதாக ஆகும். இல்லையேல் அது உங்களுக்குத் தான் ஆபத்தாக முடியும்.

என்னை நீங்கள் நேசிக்கும் விதமாக நடக்க சில எளிமையான வழிகளை உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன். கவனமாகக் கேளுங்கள் :

1) ஆபத்தில்லை எனக் கருதிக்கொண்டு பீர் (Beer) போன்ற ஆல்கஹால் கலந்த மது பானங்களில் என்னை மூழ்கடிக்காதீர்கள்.

சில நேரங்களில் ஒரே ஒரு முறை சிறிதளவு இவற்றை அருந்துவதும் கூட உங்களுக்கு அபாயமானதாக முடியும்.

2) எல்லா அலோபதி மருந்துகளும் இரசாயன (chemicals) அமிலங்கள் கலந்தனவையே. ஆகையால் மருத்துவர் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். நீங்களாவே எந்த ஆலோசனையுமின்றிக் கலந்து உட்கொள்ளும் சில மருந்துகள் கலவையினால், ஏதேனும் தீய விஷத்தன்மை உருவாகி, அது என்னை பாதிக்கச் செய்து விடலாம்.

3) நான் மிகவும் எளிதாக காயம் ஏற்படுத்தப் படுகிறேன். இந்த காயத்தின் வடுக்கள் (CIRHOSSIS) என்பன நிரந்தரமானவை.

மருந்துகள் சில நேரங்களில் தவிர்க்கமுடையாதவையே. ஆயினும் பல நேரங்களில் அது தேவையற்றவை என்பதை கவனத்தில் கொண்டு மருந்துக்களை உபயோகிக்க வேண்டும்.

4) AEROSIL போன்ற விஷத்தன்மை கலந்த ஸ்ப்ரேக்களை உபயோகித்து நீங்கள் சுத்தப்படுத்தும் போது அதைச் சுவாசிக்கவும் செய்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொண்டு வீட்டை எப்பொழுதும் போதிய காற்றோடமுடையதாக வையுங்கள், அல்லது முகத்தில்(MASK) திரையணிவது அவசியம்.

இதே போல் மூட்டைப் பூச்சிக் கொல்லி மருந்துகள், பெயின்ட் போன்ற ஏனைய இரசாயன ஸ்ப்ரேக்களையும் உபயோகிக்கும் போது அவற்றை சுவாசிக்காமல் இருக்க கவனம் செலுத்துங்கள்.

5) தாவரங்களுக்கு உபயோகிக்கப் படும் இதர பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகிக்கும் போதும் கையுறை மற்றும் காலுறைகள் அணிந்திருப்பது அவசியம். ஏனெனில், இவை தோல்கள் மூலமும் உடலில் நுழைந்துப் பலச் செல்களை(உயிரணுக்களை)யும் தாக்கி அழித்து விடுகின்றன.

அதே போன்று இவை அனைத்தும் காற்றில் கலந்துவிடும் விஷம் கலந்த இரசாயனப்பொருட்கள் என்பதை நினைவில் நிறுத்தி இவற்றை உபயோகிக்கும் போது முகம், தலை போன்ற ஏனைய பாகங்களையும் மாஸ்க், தொப்பிகள் போன்றவை அணிந்து மறைத்திருப்பது நினைவில் வைக்கப் படவேண்டிய ஒன்றாகும்.

6) அதிக அளவில் அதிகமான கொழுப்புச் சத்து கலந்த உணவுகளை உட்கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான கொலெஸ்ட்ரோலைச் சரியான அளவில் நான் உருவாக்கிக் கொள்கிறேன். இதனைக் குறித்து விரிவாக சத்தியமார்க்கம்.காம் தளத்தினர் வெளியிட்டுள்ள கொல்லுமோ கொலெஸ்ட்ரோல் என்றப் பதிவினைக் கவனமாகப் படித்துப் பாருங்கள்.

எனக்குச் சிறிது ஓய்வு கொடுங்கள். சரியான அளவில் சத்தான உணவுகளை மட்டும் உட்கொள்ளுங்கள். நீங்கள் சரியான அளவில் உணவை உட்கொண்டீர்களானால் மட்டுமே நானும் சரியாக உங்களுக்குச் சேவை செய்ய இயலும்.

முதலாகவும் இறுதியாகவும் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை… :

சாதாரணமாக நான் எனது கஷ்டங்களை உங்களுக்கு எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. அவ்வாறு சொல்லவும் மாட்டேன். எனக்கு ஏதாவது பிரச்சனை எனில், என்னால் இயன்றவரை அதைத் தாங்கிக் கொள்வேன். இவ்வாறு இருப்பதால் நீங்கள் நான் ஆரோக்கியமாகத் தான் இருப்பதாக நினைத்துக் கொள்வீர்கள். ஆனால் அது எனது மற்றும் உங்களது இறுதி நேரமாகவும் ஆகிவிடும் வாய்ப்புகள் உண்டு.

நினைவில் வைக்கவும் : நான் ஒருபோதும் குறைப்பட்டுக் கொள்வதில்லை. அதனாலேயே நான் திருப்தியாளனாக உள்ளேன் எனத் தவறாக எடை போடாதீர்கள். என்னை அதிகமாக இரசாயன திரவங்கள் மூலமும் அமிலங்கள் மூலமும் பாதிக்கச் செய்தால் நான் செயலாற்ற இயலாதவாறு பாதிப்புக்குள்ளாவேன். அதனை நான் உங்களுக்கு உடனே தெரிவிக்காமல் இருப்பதனால் அதன் மூலம் உங்கள் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து விளையலாம். இதுவே நீங்கள் பெறும் எனது ஒரே எச்சரிக்கை(அறிவிப்பு) ஆகவும் இருக்கலாம்.

எனவே இத்தகைய சூழலிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள எனது கீழ்கண்ட ஆலோசனையைச் செவிமடுங்கள் :

1. மருத்துவ ஆலோசகரிடம் என்னை முறையாக குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

2. விசேஷ இரத்தப் பரிசோதனைகள்(blood screen test) மூலம் எனது ஆரோக்கிய நிலையை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

3. நான் எப்பொழுதும் மிருதுவாக மென்மையாக இருப்பின் அது நல்லது. கடினமாகவோ அல்லது வீக்கமாக இருப்பது ஏதோ கோளாறு அல்லது அபாயம் என்னில் நிகழ்ந்துள்ளது என்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

4. உங்கள் மருத்துவர் ஏதேனும் இது போன்று சந்தேகத்தைப் பரிசோதனையின் போது உணர்ந்தால் அல்ட்ரா ஸவுண்ட்(ULTRA SOUND) அல்லது சி.டி ஸ்கேன் (C.T. SCAN) எனும் இதர பரிசோதனை மூலம் மேலதிக உதவி பெறலாம்.

5. உங்கள் உயிர் நீங்கள் என்னை நடத்தும் விதத்தில் தான் நிலைத்து இருக்கிறது.

அன்பர்களே.. இப்பொழுது உங்கள் மீதான நேசத்தில் நான் உங்களுக்குச் செய்யும் உதவிகளின் முக்கியத்துவத்தினைக் குறித்து உணர்ந்திருப்பீர்கள். தயவு செய்து நீங்களும் என்னை நல்ல முறையில் நேசத்துடனும் அக்கறையோடு பேணி நடத்துங்கள்.

உங்கள் வாழ்க்கை எனது ஆரோக்கியத்தில் தான் உள்ளது.

இப்படிக்கு,
உங்களை நேசிக்கும் உங்கள் கல்லீரல்.
source: http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=973&Itemid=56

Wednesday, February 16, 2011

ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில்,
"கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

"திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர்.

அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.