Monday, February 7, 2011

பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்களை அடைத்து விற்க தடை!

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011,23:19 IST
தினமலர்

புதுடில்லி: உணவுப் பொருட்கள் மற்றும் பான்மசாலா, குட்கா போன்றவற்றை, பிளாஸ்டிக் பைகளில் அடைக்க, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்த பொருட்களை அடைப்பதற்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருளை கண்டுபிடிக்க சிறிது கால அவகாசமும் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த இனிமேலும் கால அவகாசம் அளிக்க முடியாது என, சுப்ரீம் கோர்ட் கூறியதையடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்க தடை விதித்துள்ளது. முன்பு, 20 மைக்ரான் தடிமன் அளவுக்கு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது, 40 மைக்ரான் தடிமனுக்கு குறையாத பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.

உணவுப் பொருட்களை மக்கும் மற்றும் மக்காத பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். வண்ண நிறத்தில் இருந்தால் அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் சாயம் இந்திய தர நிர்ணய கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பது அதை சுற்று சூழல் கெடாமல் பயன்படுத்துவது போன்ற பொறுப்புகளை சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பைகளை இலவசமாக வழங்கும் நடைமுறையும் தவிர்க்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயித்து வழங்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் பைகளின் மீது தயாரிப்பாளர் பெயருடன் அந்த பிளாஸ்டிக் மக்கும் திறன் கொண்டதா? மக்காததா எவ்வளவு தடிமன் கொண்டது என்ற விவரங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment